முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் நேற்று (திங்கட்கிழமை)நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தின்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு இந்த விடயத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கெனவே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் விவாதங்கள் பயனற்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டைப் பற்றி எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவநம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்றும் கூறினார்.
இதற்கிடையில் கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், கிழக்கு கொள்கலன் முனையம் குறித்து பங்காளிக்கட்சிகள் முடிவு செய்ததைப் போலவே ஒரு உடன்படிக்கைக்கு வரத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை இந்த விடயத்தில் அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து விவாதித்து இணக்கமான முடிவுக்கு வருவது தொடர்பாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.