தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதென சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
மேலும் இந்த அரசின் இயலாமையை உணர்ந்த ஆளுநர் தமிழக பொலிஸ் டி.ஜி.பி.யை அழைத்து வழங்கிய அறிவுரைக்குப்பின், சுமார் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
இதில் 2 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மேலும் சுமார் 1,750 பேர் வரை நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் எஞ்சியுள்ள சுமார் 8 ஆயிரம் பேர் யார்? அவர்களது நிலை என்ன? அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள்? என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
தேர்தல் காலத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன தகாத சம்பவங்கள் தங்களை சுற்றி நடக்குமோ என்ற பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மேலும் சீரழியாமல், மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.