ருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய சம்பவம் இதுவாகும்.
தென்கிழக்கு துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த தீ சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு குழுக்களை வரவழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மருத்துவமனையின் கீழ் மட்டத்திலிருந்து நோயாளிகள் ஜன்னல்களிலிருந்து குதிப்பதையும், தீயணைப்பு வீரர்கள் மக்களை வெளியே கொண்டு செல்வதையும் காணொளி காட்சிகள் காட்டின.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 10 பேர் உட்பட 113 நோயாளிகள் தீவிபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் இருந்ததாக இடைக்கால சுகாதார அமைச்சர் செசெக் அட்டிலா கூறினார். தப்பிப்பிழைத்த அனைவரும் இப்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி கிளாஸ் ஐஹன்னிஸ் ஒரு அறிக்கையில், ‘சோகத்தில் நான் அதிர்ச்சியடைகிறேன்,’ என்றும் இது ருமேனியாவின் சுகாதார அமைப்பின் உள்கட்டமைப்பு இல்லாததை உறுதிப்படுத்துகிறது என்றும் கூறினார்.
19 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடான ருமேனியா, கடந்த 12 மாதங்களில் மற்ற இரண்டு கொடிய மருத்துவமனை தீ சம்பவங்களை அனுபவித்துள்ளது, இது தொற்றுநோயின் பின்னணியில் அதன் சுகாதார வசதிகள் பற்றிய கவலைகளை எழுப்பியது.
ஜனவரியில், தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள கொவிட்-19 மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து நோயாளிகள் கொல்லப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, வடகிழக்கு பியாட்ரா நியாம்ட் கவுண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்தனர்.