வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விமான நிலையத்திற்கு சென்றிருந்த சுற்றாடல் அமைச்சின் செயலாளர், முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, தடுப்பூசி அட்டை இல்லாதமையினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, தடுப்பூசி அட்டையினை எடுத்துச் செல்லாதமை காரணமாக, அனில் ஜாசிங்க விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து அனில் ஜாசிங்க, தமது தடுப்பூசி அட்டையின் படத்தைக் கையடக்க தொலைபேசி ஊடாக பெற்றுக்கொண்டு, அதனைக் காண்பித்த பின்னரே விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் 47 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.