பண்டோரா பேப்பர்ஸில் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை விரைவாக முன்னெடுக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த நிதி கொடுக்கல் வாங்கலின்போது இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது குறித்து விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் நீர் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கடல் கடந்த பாரியளவான சொத்துக்களை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
இந்நிலையில் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் நீதித்துறைக்கும் எந்தவொரு தலையீடுகளும் இன்றி சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான நிலுவையிலுள்ள விசாரணைகளை முன்னெடுப்பதும் முடிவுகளை மேற்கொள்ளவதும் இன்றியமையாத ஒன்று என்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.