13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார்.
தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
அதிகார பகிர்வின் மூலமாக அர்த்தமுள்ள நகர்வொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இந்தியாவின் சார்பில் தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.
அதேபோல் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தி அதனூடாக 13ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், அதிகார பகிர்வை நியாயபூர்வமானதும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.