வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவில், இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஈ.பி.ஆர்.பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்னம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா தொடர்பிலான இலங்கையின் முடிவுகளிலும், பல மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அதேபோன்று அரசாங்கம், தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்கள் தொடர்பான விடயங்களிலும் யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பான விடயங்களிலும் மாற்றங்களைக்கொண்டுவந்து, சிறுபான்மையின மக்களின் மனங்களை வெல்லவேண்டும்.
நாங்கள் வடக்கு- கிழக்கு தமிழ் தேசத்திற்கான போராட்டத்தினை முன்னெடுத்தாலும் அரசாங்கம் குறைந்தபட்சம் 13ஆவது அரசியலமைப்பு சட்டத்தினையாவது முழுமையாக அமுல்படுத்த முன்வரவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.