பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கட்சியான பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 31ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி தலைமையிலான அரசாங்கம் பணவீக்கம், வேலையின்மை மற்றும் மக்கள் மீது பாரிய கடன் சுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக்கின் தனது இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானில் மில்லியன் கணக்கானவர்கள் வேலையில்லாது திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு பதிலீடாக 10 மில்லியன் வரையிலான புதிய வேலைகளை உருவாக்கி வழங்குவதாக கூறினார்.
ஆனால் அவரால் அவ்விதமான செயற்பாட்டை முன்னெடுக்க முடியவில்லை. நாட்டிலிருந்து மிகத் திறமையான, தொழில் வான்மையாளர்கள் வெளியேறுவதால் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி தவறான கொள்கைகளால் பொருளாதார நிலைமைகள் மிகமோசடைந்து விளிம்புக்கு வந்துள்ளது.
ஆகவே இளைஞர்கள் நம்பிக்கையை இழக்காமல், அநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பாகிஸ்தானை ஒரு நலன்புரி இஸ்லாமிய நாடாக மாற்றும் எமது நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இளையவர்கள் அனைவரும் ஒருங்கிணையுமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சியின் தலைவர், கடந்த மூன்று வருடங்களில் மாபியாக்களுக்கு மட்டுமே நாட்டில் வசதிகளை வழங்கியுள்ளார்.
இதனால் அத்தரப்பினர் பில்லியன் கணக்கில் சம்பாதித்துள்ளனர். இந்த மாபியாக்கள், பிரதமரைச் சூழந்துள்ள குழு உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது நியாயமான விசாரணை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு வசதியாகவே பிரதமரின் விசாரணைப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பனாமா மற்றும் பண்டோரா கசிவுகளில் உள்ளவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
நாம் ஒவ்வொரு கட்டமைப்புக்களிலும் மக்களுக்காக போராடுகின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். ஆகவே, அடுத்த தேர்தலில் எமக்கு வாக்களிப்பதன் ஊடாகவே நிலைமைகளை மாற்றலாம் என்றார்.