சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது.
எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன அரசு சேமிக்க, இடைமறிக்க, திசை திருப்ப உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்க்கும் சதி மற்றும் பிற தீங்கான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வந்த அந்த நிறுவனம் அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.
110 நாடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள குறித்த நிறுவனம், இணைய வசதி முதல் மொபைல் மற்றும் தொலைபேசி நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















