இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான தமிழர்கள் சார்பில் global Rights Compliance LLP என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையின் பல மூத்த அதிகாரிகளை விசாரணை செய்து உரிய நேரத்தில் கைது செய்ய தலைமை வழக்கறிஞருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள், கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின் தீவிரம் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதைத் தவிர அmவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை இழந்தனர் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களாலும், இங்கிலாந்தில் தங்களை நோக்கித் தொடரும் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களாலும் தாம் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற முதலாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.