சீனாவின் புதிய எல்லை சட்டத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ‘இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்சினையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நில எல்லை சட்டத்தை சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.