யேமன் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமையன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய டிரக் வெடித்து சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த வாகனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவத்தில் காயமடைந்த பலர் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தற்காலிக இடமாக உள்ள ஏடன் நகரை ஈரானுடன் இணைந்த ஹூதி குழுவிடம் இருந்து பாதுகாக்க சவுதி அரேபியாவின் ஆதரவுடன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது.