ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பு எழுப்பிய பிரச்சினைகள் இன்றும் அவதானிக்கப்பட வேண்டியவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, பொதுபல சேனா எழுப்பிய மற்றும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் செயலணியால் விவாதிக்கப்பட்டு குறித்த சட்ட வரைபில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து செயலணிக்கு நன்கு தெரியும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பிரிந்து செல்வதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.