கிளாஸ்கோவில் இடம்பெறும் காலநிலை உச்சிமாநாட்டிற்கு சமூகமளிக்காத சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாதமை பெரும் தவறு என குறிப்பிட்ட ஜோ பைடன், பற்றியெரியும் வனப்பகுதி குறித்து ரஷ்ய ஜனாதிபதி மௌனமாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
சீனா, ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உட்பட ஏனைய நாடுகள் இதுவரையான பேச்சுவார்த்தைகளில் ஆற்றிய பங்கு குறித்து வினவிய போதே அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
காலநிலை உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் நடைபெற உள்ள குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக இரு நாடுகளும் தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது.
உலகிலேயே சுற்றாடல் மாசுபடும் வகையிலான வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகளில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இதேவேளை 2030 ஆம் ஆண்டுக்குள் மீத்தேன் அளவைக் குறைக்கவும் அதே ஆண்டு காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும் அதனை மாற்றியமைக்கவும் மாநாட்டில் உலகத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியில் சீனாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ள நிலையில், வனப்பகுதிகளைப் பாதுகாக்க வலுவான மற்றும் மிகதீவிரமான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வருகின்றது என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.