கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நகரை பாதுகாக்க ஆயுதங்களைப் பதிவுசெய்து, தயாராக இருக்க வேண்டும் என எத்தியோப்பிய அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் நகரத்தை நோக்கி முன்னேறக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில் எத்தியோப்பிய தலைநகரான அடிஸ் அபாபாவில் உள்ள அதிகாரிகள், இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டு நகரங்களை கைப்பற்றியதாக தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி அறிவித்து இரண்டு நாட்களின் பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை மத்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும் அடிஸ் அபாபாவை கைப்பற்ற முயற்சிக்க வேண்டாம் என கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
400,000 மக்கள் பஞ்சத்தில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ள தைக்ரேயின் முற்றுகையை உடைக்க விரும்புவதாக தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
பிரதமர் அஹ்மத் அபியின் அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாக ஆரம்பத்தில் வீழ்ந்த அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன.