இவ் வருடத்திற்கான கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் அடம்பன் பிரதேச கால் நடைகளை இலுப்பக்கடவை பகுதியில் உள்ள பெரிய வெளியில் மேய்ப்பதற்காக கொண்டு செல்ல கட்டுக்கரை திட்டமிடல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான தீர்மானத்தால் இலுப்பக்கடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட பல விவசாயக் கிராமங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த வருடமும் பல விவசாயிகளில் பாதிக்கப்பட்டதாகவும் கால்நடைகளை பலர் இரவில் பட்டிகளில் அடைப்பது இல்லை எனவும் இதனால் நெற் பயிருக்கு அழிவை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தேத்தாவாடி கிராமத்தில் மேட்டு நில பயிர்ச் செய்கையும் கால்நடைகளால் அளிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அரச அதிகாரிகள் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்பது இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இம்முறை கால்நடைகளால் சேதம் ஏற்படும் பட்சத்தில் அரச அதிகாரிகளோ பொறுப்பேற்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளதுடன், கடந்த வருடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோர் சந்தித்து தமது பாதிப்புகள் பற்றி விளக்கி இம்முறை கால் நடைகளை கொண்டு வர அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி கூறியிருந்தோம் என அப்பகுதி விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இம்முறையும் கால்நடைகள் வருவதையிட்டு மிகவும் வேதனை அடைவதாக தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் கடந்த வருடம் இவ்வாறு கால்நடை மேய்ப்பதற்காக நானாட்டான் பிரதேசத்தில் இருந்து சென்ற ஒருவர் தாக்கி யானை தாக்கி உயிரிழந்தார்.
நிரந்தர மேய்ச்சல் தரை இன்மையால் கால்நடை வளர்ப்பாளர்களும், இலுப்பைக்கடவை விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
நீண்ட காலமாக தொடரும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முடிவு எடுக்க முடியாமை இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என தெரிவித்த பாதிக்கப்பட்ட விவசாயிகள், இந்த நிலை தொடருமாக இருந்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.