மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘மின்சார கார் உற்பத்திக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவதுடன், முக்கிய நெடுஞ்சாலைகளில் மின்கார்களுக்கான சார்ஜிங் மையங்களை திறக்க உள்ளதால் இது சாத்தியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மின்சார கார்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், அவற்றுக்கான லித்தியம் பேட்டரிகளின் விலை குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த கொள்கை முடிவை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சார்ஜிங் மையங்களுக்கான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி வாயிலாக வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.