கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கோவிலில் இருந்த ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லொன்றும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர், நேர்த்திக் கடனொன்றை செலுத்து முகமாகவே, இந்த மாணிக்கக்கல்லை, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு வழங்கியிருந்தார்.
குறித்த மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பமை குறித்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு ஏற்கனவே நேர்த்திக்கடனுக்காக வழங்கப்பட்டிருந்த 38 பவுன் எடையுள்ள தங்கத் தகடொன்றும் காணாமல் போயுள்ளது.
போதைப் பொருள் வர்த்தகர் அங்கொட லொக்கா என அழைக்கப்படுபவர், தமது மகனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துமுகமாகவே, மேற்படி தங்கத் தகட்டினை, ஆலயத்திற்கு வழங்கியிருந்தார்.
இத்தங்கத் தகடு காணாமல் போனதையடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
இது குறித்து குற்றப் புலனாய்வுப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தகடு ஆலயத்திற்கு வழங்கியமை தொடர்பாக, அங்கொட லொக்காவின் மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேர்த்திக்கடன்களுக்கு செலுத்தப்பட்டிருந்த 38 பவுன் தங்கத் தகடு, 50 மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பது குறித்து, குற்றப் புலனாய்வுப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த ஆலயத்திற்கு இதுவரையில் வழங்கப்பட்ட நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைப் பொருட்கள் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன.