நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருணாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களிலுமுள்ள, 126 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் இன்று நண்பகல் வரை 22 பேர் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மண்சரிவு, வெள்ளம் என்பவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட 384 குடும்பங்களைச் சேர்ந்த 1498 பேர் 23 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் அனர்த்தம் ஏற்படக் கூடும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளிருந்து முன்னெச்சரிக்கையாக ஆயிரத்து 20 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 537 பேர் இடமாற்றப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 481 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 18 வீடுகள் முழுமையாகவும், 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாரம்மல், பொல்கஹவெல, அலவ்வ, பன்னல, பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு மேலும் உயர்வடைந்துள்ளதோடு, பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.