பண்டோரா ஆவணங்கள் தொடர்பாக இலஞ்சம்/ ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கடந்த மாதம் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.கே.டி. விஜேரத்ன கடந்த திங்கட்கிழமை இடைக்கால அறிக்கையை சமர்பித்தார்.
திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்குகளின் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருகிறதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணை நிறைவடையாததால், கோரப்பட்டுள்ள அறிக்கைகளை மேலும் ஆய்வு செய்து, தொடர்புடைய ஏனைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில், இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.