நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டுத்திடல் தொடர்பில் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது திறப்பு விழா பற்றிய விடயங்களும் மைதானத்தில் உள்ள விசேட அம்சங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
இலத்திரனியல் ஸ்கோர்போட், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், பயிற்சிகளுக்கான இடம், மைதான பராமரிப்பு போன்ற வசதிகளுடன் 55 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நவீன விளையாட்டு திடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுத்திடலானது வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மைதானத்தில் எதிர்வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.