ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் 2ஆவது வரவு – செலவுத் திட்டம் இதுவாகும். அதேபோல நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கன்னி வரவு – செலவுத் திட்டமும் இதுவாகும்.
சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையில் இதுவரை 75 வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாளை முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டமானது 76 வரவு – செலவுத்திட்டமாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நிதி அமைச்சு பதவியை வகித்து, வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
பஷில் ராஜபக்ஷவிற்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே நிதி அமைச்சராக செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தகாலப்பகுதியில் நிதி அமைச்சும் அவர் வசமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக இதுவரை 11 வரவு – செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.
நாளை வரவு – செலவுத் திட்ட உரையின்போது பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமதுரையின்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளார்.
கொரோனா தொற்று நிலையென்பதால் முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வரவு – செலவுத் திட்ட தொடர் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவரப்படுத்தப்பட்டுள்ளன.
12 ஆம் திகதி நிதி அமைச்சரின் உரை மட்டமே இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பாகும்.
இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு).
டிசம்பர் 10ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். ஞாயிறு மற்றும் பௌர்ணமி விடுமுறை தினங்களைத்தவிர ஏனைய நாட்களில் சபை தொடர்ச்சியாகக் கூடும்.