தங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று ஈரானின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஈரான் மீதான தடைகள், புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற துறைகளில் நாட்டை முடக்குகின்றது. உலகின் வேறு எந்தப் பகுதியையும் போலவே ஈரானும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் வருடாந்திர மழைப் பொழிவை குறைத்துள்ளது. எங்கள் ஆறுகளுக்கு வரும் நீரின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், எங்கள் விவசாயம், எங்கள் தொழில்துறை, குடிநீர்த் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒடுக்குமுறை தன்மையுள்ள தடைகள் அமுலில் உள்ள நிலையில், எந்தவிதமான இறக்குமதியும் செய்ய முடிவதில்லை. அடிப்படை மனித உரிமையான மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை
தடைகள் நீக்கப்பட்டால் சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் கடமைப்பட்டவர்கள். அந்த சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எங்களுக்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் நவீன தொழில்நுட்பத்தையும், நிதியையும் எங்களுக்கு அனுப்ப முடியும். இதனால் எங்களால் எங்கள் கட்டமைப்பை நவீனப்படுத்த முடியும்’ என கூறினார்.
உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள ஈரான், 2015ஆம் ஆண்டு முதல் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. 2030ஆம் ஆண்டுக்குள் அவற்றின் உமிழ்வு 50 சதவீதமாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.