அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ்.மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “நான் இன்று ஓய்வு பெற்று இருக்கின்றேன் நான் இன்று நேர்மையான அதிகாரி என எல்லாராலும் சொல்வதற்கு காரணம் என் தந்தை மற்றும் என்னை கற்பித்து வழிநடத்திய ஆசிரியரும்.
குறிப்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் என்னுடன் பல நேர்மையான அரச உத்தியோகத்தர்கள் இணைந்து பணாயாற்றியதன் காரணமாக ஒரு குழு அணியாக நாங்கள் கடமையாற்றியிருந்தோம்.
அதன் காரணமாக பெருமளவு நிதியினைப் பெற்று யாழ் மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருந்தோம். குறிப்பாக வலி வடக்குப் பிரதேசத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் செயற்படுத்தினோம்.
ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு சுற்று நிருபங்கள் கூட தவறாக இருந்தால் அதை மாற்றி அமைத்துச் செயற்படுத்த முடியும் எனவே அரச சேவையிலுள்ளோர் ஏழை மக்களுக்கு கட்டாயமாக உதவ முன்வர வேண்டும்.
அத்தோடு அன்பாகப் பழகி சேவையாற்ற வேண்டும் அன்பு தான் என்றும் நிலைத்திருக்கும். குறிப்பாக அரசியல்வாதிகளின் சொல்லைக் கேட்டு செயற்படுத்தும் அதிகாரியாக இல்லாது பொதுமக்களுக்கு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானும் ஒரு அரச உத்தியோகத்தர்களாகவே செயற்பட வேண்டும்.
நான் என்னுடன் பணியாற்றிய இளம் உத்தியோகத்தர்களுக்கு கூறுவது அதைத்தான். அன்பால் எதையும் சாதிக்க முடியும் என தற்போது பலரும் கூறுகின்றார்கள்.
65 வரை ஓய்வு காலம் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் எனக்கு தெரியும் நான் இந்த கால கட்டத்தில் என்னால் கடமையாற்ற முடியாது. நான் நேர்மையாக கடமையாற்றியதன் காரணமாக தற்போதைய ஊழல்வாதிகளுடன் இணைந்து என்னால் கடமையாற்ற முடியாது.
அதன் காரணமாகவே என்னை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சித்தார்கள் எனினும் நான் ஓய்வினை பெற்றுக்கொண்டேன்.
நான் கடமையாற்றிய காலத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் முன்னுரிமை கொடுத்துச் செற்பட்டத்தியதில்லை. அது அனைவரும் அறிந்ததே அனைவருக்கும் சமனாகவே ஆகவே நான் செயற்பட்டேன்.
அத்தோடு சிலர் பிழையான பல விடயங்களை செய்யச் சொல்லி கூறுவார்கள் நான் கூறுவேன் அவ்வாறு செய்ய முடியாது என, எனவே தற்போதுள்ள நிலையில் சில பிழையான விடயங்களை செய்ய தூண்டியவர்களுடன் என்னால் கடமையாற்ற முடியாது.
அத்தோடு அ, ஆ கூறுபவற்றை எல்லாம் செயற்படுத்த முடியாது. நாம் நேர்மையாக கடமை புரியும் போது யாருக்கும் பயப்படத் தேவையில்லை அதுதான் உண்மை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.