ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நல்லின மரங்களை நடும் தேசிய மரநடுகை திட்டமானது நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள்தோறும் இடம்பெற்றுவருகின்றது.
அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இம்மரநடுகை திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மட்டக்களப்பில் அருகிவரும் மருத்துவ குணம் நிறைந்த, 400 தொடக்கம் 500 வருடங்கள் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய மரமாக காணப்படும் இலுப்பை மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமானது மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முற்கட்டமாக பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ் தலைமையில் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் குறித்த விளையாட்டுக்கழகத்தின் பங்களிப்புடன் இடம்பெற்ற மரநடுகை நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் கலந்துகொண்டு பயன்தரும் மருத்துவக் குணம் நிறைந்த இலுப்பை மரக் கன்றுகளை நாட்டிவைத்தார்.
அத்தோடு கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தடானை கிராமத்திலும் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்ற மரநடுகையிலும் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு இலுப்பை மரக்கன்றுகளை நாட்டிவைத்துள்ளதுடன் ஏனைய 12 பிரதேச செயலக பிரிவுகளிலும் கட்டம் கட்டமாக இலுப்பை மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டமானது இடம்பெற்றுவருகின்றது.
நாட்டின் சனத்தொகை பரம்பல் அதிகரித்து வரும் நிலையில் பயன்தரும் மரங்கள் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வருகின்றமையே வரலாற்றுப் பதிவாக மாறிவருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அருகிவரும் மருத்துவ குணம் நிறைந்த நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய, ஒட்சிசனை அதிகளவில் உற்பத்தியாக்கக்கூடியதுமான இலுப்பை மரத்தினை நடுவதன் ஊடாக பயன்பெறலாம் எனும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அரசசார்பற்ற நிறுவனங்களான வேல்ட் விசன், காவியா பெண்கள் அமைப்பு, செரி தொண்டு நிறுவனம், அக்சன் யுனிட் லங்கா மற்றும் மேலும் சில தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் மாவட்டம் பூராகவும் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 5000 மரக்கன்றுகளை நடும் செயற்திட்டமானது தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக நடப்படும் இலுப்பை மரக்கன்றுகள் சரியானதொரு முகாமைத்துவத்துடன் பராமரிக்கும் நோக்கில் பிரதேச செயலாளர்களினால் அவ்வப்பகுதிகளில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள், பொது அலுவலக வளாகங்கள், ஆலய வளாகங்கள் மற்றும் மேலும் பல பொது இடங்களில் நடப்படுவதுடன், உரிய முறையில் பராமரிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு இலுப்பை மரத்தின் மகத்துவம் தொடர்பில் புரிதலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த மரநடுகை இடம்பெற்று வருவதுன், பெயர் வழியாக பண்பாட்டுடன் ஒன்றித்த இலுப்பையடிச்சேனை மற்றும் இலுப்பையடி முன்மாரி போன்ற மேலும் சில காரணப்பெயர் கொண்ட கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.