பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உள்ள பி.ஜே.பி. அரசாங்கத்தினை திருப்திப்படுத்த இந்துத்வா இராஜதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கையிலெடுக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்திலுள்ள கல்லை ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டு செல்கின்றமை மற்றும் இறைச்சிக்காக மாடு அறுப்பதை தடுப்பது பற்றிய சட்ட மூலத்ம் கொண்டுவரப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் இதனை கூறினார்.
இந்து – பௌத்த ஒற்றுமை பற்றி பேசும் அதேவேளை வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் இந்து தமிழ் மக்களின் சமத்துவம் மற்றும் கௌரவத்தை உறுத்திப்படுத்துவதை எதிர்க்கின்றீர்கள் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டினார்.
மேலும் பாரம்பரிய இந்து ஆலயங்களை பௌத்த விகாரைகளாக பிரகடனப்படுத்தி அவ் இடங்களை பௌத்த பிக்குகள் ஆக்கிரமிப்பதற்கு படையினர் உதவுகின்றனர் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.