லிதுவேனியாவில் தாய்வான் பிரதிநித்துவ அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்துள்ளது.
இதன்படி, லிதுவேனியாவுக்கான தூதரக அந்தஸ்தை இடைக்கால தூதரகம் என்ற நிலைக்கு சீனா குறைத்துள்ளது.
ஏற்கெனவே, லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன் அந்த நாட்டின் தூதரை சீனா வெளியேற்றியுள்ளது. இந்த விவகாரம், இருநாட்டு உறவில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும் என சீனா எச்சரித்திருந்தது.
உலகின் எல்லா முக்கிய நாடுகளுடனும் வர்த்தக அலுவலகங்களையும் அதிகாரப்பூர்வமற்ற தூதரகங்களையும் தாய்வான் கொண்டுள்ளது. தாய்வானுடன் 15 நாடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமான தூதரக உறவைக் கொண்டுள்ளன.
முதலாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த லிதுவேனியா, கடந்த 1918ஆம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனம் செய்தது. தாய்வானும் சீனாவின் கிங் அரச வம்ச ஆட்சியிலிருந்து அதே ஆண்டில் தன்னை விடுவித்துக் கொண்டது.
அதையடுத்து, இரு நாடுகளும் கடந்த 1921ஆம் ஆண்டு தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்டன. லிதுவேனியாவை சோவியத் ஒன்றியம் கடந்த 1940ஆம் ஆண்டில் இணைத்துக் கொள்ளும் வரை இந்த உறவு தொடர்ந்தது.
பின்னர் சோவியத் ஓன்றியம் சிதறுண்டு, லிதுவேனியா மீண்டும் தனி நாடான பிறகு தாய்வானுக்கு பதில் சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள அந்த நாடு முடிவு செய்தது.
இந்தச் சூழலில், சீனாவால் லிதுவேனியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய பாதுகாப்பு அறிக்கையில் கூறப்பட்டது. அதற்குப் பிறகு, லிதுவேனியாவுக்கும் தாய்வானுக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அலுவலகத்துக்கு இணையான பிரதிநிதித்துவ அலுவலகத்தை அமைத்துக்கொள்ள லிதுவேனிய நாடாளுமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கெனவே லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை சீனா திரும்ப அழைத்தது. மேலும், தங்கள் நாட்டிலிருந்து லிதுவேனியத் தூதரையும் வெளியேற்றியது.
இந்தச் சூழலில், வில்னியஸ் நகரில் தாய்வான் பிரதிநிதித்துவ அலுவலகம் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.