அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கைகளிலேயே இருப்பதாகவும், கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்துக் கொண்டு கல்லெறியக் கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் என்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நான் கருத்து வெளியிட வேண்டும்.
நான் ஜனாதிபதியாக இருந்தக் காலத்தில், ஜனாதிபதியின் செலவு தொடர்பாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், தற்போதைய ஜனாதிபதியின் செலவுகள் தொடர்பான நடவடிக்கைகள், நாட்டுக்கு ஒரு முன்மாதியான விடயம் என தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக, நான் ஜனாதிபதியாக பதிவி வகித்த காலத்தில், தேவையில்லாத அநாவசியச் செலவுகளை செய்ததாககே மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது. கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்துக் கொண்டு கல் எறிய நான் விரும்பவில்லை.
எனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு நான் ஒரு முன்மாதியாக இருக்க வேண்டும் என்றே 2015 இல் நான் செயற்பட்டேன். ஆடம்பர செலவுகளை நான் என்றும் மேற்கொள்ளவில்லை.
1947 முதல் ஆட்சி செய்த அரசாங்கங்கள், பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திற்கு வர, கூட்டணி அமைத்துக் கொண்டு, பாதியிலேயே உடைத்த வரலாறுகள் காணப்படுகின்றன.
இந்த அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கைகளில்தான் இந்தப் பலம் உள்ளது என்பதை நான் இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, தேவையில்லாமல் அரசாங்கங்கத்துக்குள்ளேயே முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால் அரசாங்கத்திற்கு என்ன விளைவு ஏற்படும் என்பதை வரலாறுகள் காண்பித்துள்ளன.
தற்போதைய ஜனாதிபதியை உயர்த்திப் பேசுவதற்காக, எம்மை தாழ்த்த வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். நாம் நட்புடன் செயற்படுவோம். நாம் அனைவரும் உயர் பதவிகளில் இருந்தவர்கள் என்பதால், எமது தகுதிகளுக்கு ஏற்ப கருத்துக்களை வெளியிடுவோம்.
நான் தங்கியிருந்த வீடுகள், எனது விமானப் பயணங்கள் தொடர்பாக எல்லாம் தேட முடியுமாக இருந்தால், நாமும் பல விடயங்களை தேடவேண்டியேற்படும். இது தேவையில்லாதது.
தற்போது கொரோனா பரவல் காரணத்தினால் உலகலாவிய ரீதியாக அனைத்து மாநாடுகளும் தடைபட்டுள்ள நிலையில், இணையத்தின் வழியே நடக்கின்றன என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன்.
விவசாய அமைச்சர் மஹிந்தா அளுத்கமகே, ஜனாதிபதியிடம் பொய்யான கருத்துக்களைக் கூறினார். அமைச்சரவையில் பொய்க் கூறினார். நாடாளுமன்றில் பொய்க் கூறினார். விவசாயிகளிடத்தில் பொய்க்கூறினார். கொள்வனவார்களிடம் பொய்க்கூறினார். மக்களிடம் பொய்க் கூறினார்.
இதனால்தான் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் இவ்வளவு போராட்டங்களை மேற்கொண்டார்கள். விவசாயத்துறையினால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் வர, அமைச்சர் மஹிந்தனந்தவின் இந்தச் செயற்பாடுகள் தான் காரணம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.