நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட சிங்களம் மற்றும் பௌத்தத்தினை முன்னிலைப்படுத்திய அரசியலமைப்பொன்றே உருவாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலிக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று உயர்ஸ்தானிகரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டபோதே சித்தார்த்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு விடங்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்த சித்தார்த்தன், கல்வித்துறை மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புக்களை அவுஸ்திரேலியா மேம்பட்ட ரீதியில் தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்கள் மேலும் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சித்தார்த்தன் உயர்ஸ்தானிகரிடத்தில் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஒரு அரசியலமைப்பினை உருவாக்கும் என நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.