இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மன்னார் பஜார் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட.மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு கையளிக்கும் முகமாக பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்னார் மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு- கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கம் சமாச செயலாளர் ஆலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பெனடிற் குரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார், முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கையெழுத்து பெற்று நாளைய தினம், மனித உரிமை தினத்தில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.