நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மீதான தாக்குதல் முயற்சி சம்பவங்கள் குறித்து ஆராய குழு ஒன்றினை நியமிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் கூட இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.
மேலும் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்தப்பட்டதாகவும் எவ்வாறாயினும், அவர்கள் வழங்கிய அறிக்கையின் ஊடாக எதுவுமே வெளிவரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு என்றாலும் நாடாளுமன்ற நடவடிக்கையில் இருந்து அவர்களை இடைநிறுத்தக் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
இந்நிலையில் நியமிக்கப்படவுள்ள குழுவின் அறிக்கை கிடைக்க மேலும் மூன்று மாதங்கள் எடுக்கும் அதேவேளை இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினை இருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அத்தோடு குழுவொன்றை நியமிப்பதன் மூலம் விடயத்தை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக, சம்பவத்தை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர் எதிர்க்கட்சி உறுப்பினரை தாக்க முற்பட்டார்.
இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் அறிவித்திருந்த நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.