பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் ஃபேஸ்புக் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பரப்ப அனுமதிப்பதாக ரோஹிங்கியா அகதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஃபேஸ்புக்கின் தளங்கள் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாகக் கூறி, அவர்கள் 150 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாகக் கோருகின்றனர்.
எனினும், மீட்டா என அழைக்கப்படும் ஃபேஸ்புக், இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
பிரித்தானியாவில், அகதிகள் சிலரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரித்தானிய சட்ட நிறுவனம் ஃபேஸ்புக்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதேபோல, அமெரிக்காவில், வழக்கறிஞர்கள் சான் பிரான்சிஸ்கோவில் ஃபேஸ்புக்கிற்கு எதிராக சட்டப்பூர்வ புகாரை பதிவு செய்தனர்.
‘வெறுக்கத்தக்க மற்றும் ஆபத்தான தவறான தகவல்களைப் பரப்புவது பல ஆண்டுகளாக தொடர அனுமதிப்பதாக நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சை விரிவுபடுத்தியது, ரோஹிங்கியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பதிவுகளை அகற்றவோ அல்லது கணக்குகளை நீக்கவோ நிறுவனம் தவறிவிட்டது.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் எச்சரித்த போதிலும், அது தகுந்த மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது’ என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இராணுவ ஒடுக்குமுறையின் போது 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது..