நீலகிரி மாவட்டம் காட்டேரியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் குறித்து ரஷ்ய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து ரஷ்யா அரசின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி நிறுவனமான ரொப்ஸாபொரோன் எக்ஸ்போர்ட் விடுத்துள்ள அறிக்கையில், இராணுவ வீரர்களையும், சரக்குகளையும் ஏற்றிசெல்லும் வகையில் எம்ஐ17வி5 ஹெலிகொப்டர் வடிவமைக்கப்பட்டது.
இதன் சரக்குகள் வைப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் வான்வழியாக அல்லது தரையிலிருந்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை உளவுபார்த்து முறியடிக்கவல்லது.
இந்த ஹெலிகொப்டர் ஒருமணிநேரத்தில் 250 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன்வாய்ந்தது. இதில் மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ்-117 விஎம் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எம்ஐ-817 பிரிவில் இந்த ஹெலிகொப்டர் தொழிநுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், போக்குவரத்து பயன்பாட்டுக்காக ஹெலிகாப்டர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், 80 எம்ஐ-17வி5 ரக ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் கடந்த 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் போடப்பட்டது. இதன்படி கடந்த 2011 ஆம் இந்த ஹெலிகொப்டர்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.