நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் காணப்படும் தெளிவற்ற தன்மைகளை அமைச்சர்களுக்கு விளக்குவதற்காக, தான் அழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அஜித் நிவாட் கப்ரால் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இலங்கை தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இருப்பினும் இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.