மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக, அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடக்கம் மன்னார் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு மேற்படி மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடக்கம் மன்னார் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தடுப்பூசிகள் பெற்று வருவதுடன் இவ்வாரம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.