நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதத்திற்குள் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அடுத்த வருடத்தின் முதல் மாதத்திற்குள் நாடு மொத்தமாக 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
43ஆவது படையணியின் சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அடுத்த மாதத்திற்குள் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மைப் பத்திரங்களைச் செலுத்த வேண்டும் எனவும், அபிவிருத்திப் பத்திரங்களாக 242 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் JICA ஆகியவற்றிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான கடனை செலுத்த வேண்டும் எனவும், அடுத்த வருடத்தின் முதல் மாதத்திற்குள் நாடு மொத்தமாக 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 1.15 பில்லியன் டொலர்கள் மட்டுமே வெளிநாட்டு கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்ட சம்பிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடனை செலுத்த முடியாத கட்டத்திற்கு நாடு தள்ளப்பட்டுவிடும் எனவும் தெரிவித்தார்.