தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில், இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் பங்கேற்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலின் இறுதியில் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ள சந்திப்பில் மேலும் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.