அரசாங்கத்தில் உள்ள அனைத்து பங்காளி கட்சி தலைவர்களையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பங்காளி கட்சிகளுக்கும் அரச தலைவர்களுக்கும் இடையில் சுமுகமான தன்மை காணப்படாமல் இருப்பது கூட்டணியின் கருத்து முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் கூட்டணி அமைத்துள்ள பங்காளி கட்சி தலைவர்களுக்கும், பிரதமருக்கும் இடையில் கடந்த காலங்களில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற கட்சித்தலைவர் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் கூடவில்லை என கூறினார்.
பங்காளி கட்சி தலைவர்களுக்கும், அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறைவடைந்துள்ளால் சுமுகமான தன்மையினை பேண முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வாசு சுட்டிக்காட்டினார்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.அதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலப்பகுதியில் சிறந்த திட்டங்களை அமைத்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசேடமாக வலியுறுத்தவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச அடிப்படையில் நிவாரணம் வழங்கும் திட்டங்களை செயற்படுத்துமாறு நிதியமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.