நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கத் தவறினால், முன்னர் கொரோனா தொற்று அலைகளின் போது ஏற்பட்ட சிரமங்களை நாடு மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும் என விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா தொற்றின் ஆபத்து இன்னும் தொடர்கின்ற நிலையில் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.
இதேநேரம் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் அன்வர் ஹம்தானி கேட்டுகொண்டார்.
பூஸ்டர் தடுப்பூசி புதிய மாறுபாடுகளுக்கு எதிராக மேலதிக பாதுகாப்பை வழங்கும் மற்றும் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.