இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி இம்மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 400 மில்லியன் டொலரும் எரிபொருளுக்காக 500 மில்லியன் கடனுதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த இரு நிதியுதவி திட்டங்களில் ஒன்று ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெறும் என உயர்மட்ட தகவல்களை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பில கடந்த வாரம் இலங்கையும் இந்தியாவும் இணைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதாக அறிவித்திருந்த அதேவேளை லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் தாங்கிகளின் குத்தகை மேலும் 50 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தை தவிர, எரிபொருளுக்காக 500 மில்லியன் டொலர் கடன் வரியையும், உணவு மற்றும் மருத்துவக் கொள்வனவுகளுக்காக 1 பில்லியன் டொலர் கடனையும் இலங்கை நாடியது.
இந்த நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனவரி 10 ஆம் திகதி இந்தியாவிற்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.