வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற சுற்றுலாவுக்கு அனுமதி என்ற தொனிப்பொருளிலான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி, சுற்றுலாத் துறையின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உலகளாவிய கொரோனா தொற்றுப் பரவல் ஒரு முக்கிய காரணியாக மாறியிருக்கின்றது என்றும் இது, சுற்றுலாத்துறையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை இழக்கச்செய்யும் அளவுக்கு பலமிக்கதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குக் கிடைத்துவந்த பாரிய நிதியை நாடு இழந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கும் பிரதான மூல காரணிகளில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் காணப்பட்டது.
ஏனைய நிதி மூலங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாத்துறையில் இருந்தே நாட்டுக்கு நிகர வருமானம் கிடைத்தது.
புதிய திட்டங்கள் மற்றும் உத்திகளின்படி, 2030ஆம் ஆண்டளவில் நாடு 07 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வசதி மற்றும் முகாமைத்துவத்தை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான நவீன மென்பொருளை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸாரால் நடத்தப்படும் சுற்றுலா பொலிஸ் சேவையைப் புதிய வடிவில் மேற்கொள்வதற்காக அதன் பிரிவுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அதற்கு அனுமதி அளிப்பதற்கான அடிப்படைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதற்கு முன்னர் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருந்த பலர் கொரோனா தொற்றை அடுத்து அத்துறையில் இருந்து வெளியேறியுள்ளமையானது பாரிய சவாலாகக் காணப்படுவதாகவும் இந்தச் சவாலை முறியடிக்க புதிய தொழில் முயற்சியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், இலங்கையின் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பாக சர்வதேசத்தில் நிலவுகின்ற நன்மதிப்பை இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது காலத்துக்குப் பொருத்தமானதாகும் என்றும் இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.