ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீதி கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் உட்பட அனைவருக்கும் உச்சபட்ச தண்டனையை பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான விசாரணையின் மூலம் வழங்க தான் ஒருபோதும் தயங்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக மக்கள் கவலைகளை எழுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் நடத்தை மற்றும் மந்தமான விசாரணைகள் இந்த கவலைகளை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிகாரத்தைப் பெற ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்திய அரசாங்கம், அதையெல்லாம் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.
அண்மையில் தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சஜித், அந்த விசாரணைகளும் மிகவும் கவலையளிக்கும் வகையில் இடம்பெற்று வருவதாகவும் அது பலத்த சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
அரசு, பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்குவது நல்லதல்ல என்றுத் சஜித் பிரேமதாச கூறினார்.