இலங்கை மின்சார சபைக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக மின்சக்தி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
எரிபொருள் தாங்கி ஒன்று தற்போது துறைமுகத்தில் உள்ள நிலையில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலை அடுத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் தாங்கியை விடுவிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
அதன்படி, கப்பலில் உள்ள எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விடுவிக்கப்பட்டதும், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளையும் இலங்கை மின்சார சபை பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அனைத்து ஏற்றுமதிகளுக்கும் மத்திய வங்கி டொலர்களை வழங்கிய நிலையில் இந்த ஏற்றுமதிக்கு தேவையான டொலர்களையும் மத்தியவங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்வோம் என்றும் காமினி லொகுகே தெரிவித்தார்.
அத்தோடு தற்போது நிலவும் மின்சார நெருக்கடியை இம்மாதம் 22ஆம் திகதிக்குள் சரிசெய்ய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.