வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் 234 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான வீடமைப்புத் திட்ட காணிகளை, உரியவர்களிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகப் பிரதேசத்தில் ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் 92.92 ஹெக்ரெயார் அளவு கொண்ட காணியில் அரச அலுவலர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் அக்காணியில் 711 காணித் துண்டுகள் பிரதேச செயலாளரின் பரிந்துரைக்கமைய அடையாளம் காணப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 215 குடும்பங்களுக்கு வீடமைப்புக்காக 500,000 ரூபாய்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இக்கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 09 வருடங்கள் கடந்தாலும் குறித்த பயனாளிகளுக்கு இதுவரை அக்காணிகளுக்கான உறுதி வழங்கப்படவில்லை.
அதனால், குறித்த பயனாளிகளுக்கு காணி உரிமமாற்று உறுதிப்பத்திரங்களை வழங்கும் வகையில் குறித்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.