இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி தொடரை வென்று இந்தியா அணியை, வைட் வோஷ் செய்துள்ளது.
கேப் டவுனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 124 ஓட்டங்களையும் வெண்டர் டுஸன் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரசீத் 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சஹால் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 288 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 65 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 61 ஓட்டங்களையும் தீபக் சாஹர் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி மற்றும் என்டில் பெலுக்வாயோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டுவைன் பிரிடோரியஸ் 2 விக்கெட்டுகளையும் சிசன்டா மகலா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.