அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அவைவருக்கும் தனது தலைமையிலான அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் அரசியல் பழிவாங்கலுக்கு முகம் கொடுத்த அனைத்து நபர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பூலோக ரீதியாக பாகங்களாகப் பிரித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அபிவிருத்தியின் பிரதிபலன் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் சரிசமமாகப் பகிரப்பட வேண்டும்.
நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பதன் காரணமாக ஒரு சிலர் என்னை விமர்சிக்கின்றனர். மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அவர்கள் துக்கத்துடன் இருக்கின்றனர்.
அரசியல்வாதிகளும் பணம் படைத்தோர்களும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எவரும் வாய்த்திறப்பதில்லை.
முதலாளிமார்கள், பணம் படைத்தோர் பற்றி மாத்திரமின்றி சூறையாடலுக்கு உள்ளாகும் மக்கள் தொடர்பில் ஆராயும் எனது பொறுப்பை ஒருபோதும் கைவிடமாட்டேன். பல வருடங்களாகப் பல துயரங்களுக்கு மத்தியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் உள்ளனர்.
நான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணியானது அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கபட்டவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும்” என கூறினார்.