கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது.
போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்கள் வாகனங்களுடன் போராட்டதை நடத்தி வருகிறார்கள்.
கடந்த எட்டு நாட்களாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒட்டாவாவின் நகரை முற்றுகையிட்டு நேற்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கனேடியக் கொடியை அசைத்து, அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர்.