ஏப்ரலில் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எரிசக்தி விலைகள் மற்றும் வரி அதிகரிப்புகளால் உந்தப்பட்ட வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் மத்தியில், பிரித்தானியாவின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, வசந்த காலத்தில் 5 சதவீத விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் டெஸ்கோவின் தலைவராக இருந்துவரும் ஜோன் ஆலன், உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மோசமான நிலை இன்னும் வரவில்லை’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘உணவு என்பது வீட்டுச் செலவில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியாகும், இது சுமார் 9 சதவீதம் மட்டுமே, கடந்த அரை நூற்றாண்டில் அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.
ஆனால் நிச்சயமாக, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய வீதமாகும். கடினமாக இருப்பவர்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய முடியும் என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் கடந்த காலாண்டில் டெஸ்கோவில் உணவு விலை பணவீக்கம் 1 சதவீதம் மட்டுமே என்றாலும், எரிசக்தி விலைகள் உயர்வதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்; எரிசக்தி விலைகள் உயர்வதால் எங்கள் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, பணவீக்க தூண்டுதல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அதை ஈடுகட்ட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்’ என கூறினார்.
வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக எரிசக்தி கட்டணங்கள் மீதான வட் வரியை அரசாங்கம் குறைக்கும் வாய்ப்பை வணிகச் செயலர் குவாசி குவார்டெங் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து வங்கியின் ஆளுநரான ஆண்ட்ரூ பெய்லி, ஏப்ரல் மாதத்திற்குள் பணவீக்கம் சுமார் 7 சதவீதம் உயரக்கூடும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு அது இயல்பு நிலைக்குத் திரும்பாது என்றும் எச்சரித்தார்.
‘கடந்த இலையுதிர்காலத்தில், வசந்த காலத்தில் உணவு விலைகள் சுமார் 5 சதவீதம் உயரும் என்று நான் கணித்தேன்’ எனவும் ஆலன் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை, டிசம்பரில் 2.4 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜனவரியில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.



















