2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று ( புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம்’ எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களின் நன்மைக்கருதியும், நிர்வாகச் செயற்பாடுகளை இலகுப்படுத்தும் நோக்கிலும் புதிதாக 5 பிரதேச செயலகங்களை அம்மாவட்டத்தில் அமைப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அப்போது துறைசார் அமைச்சராக இருந்த வஜீர அபேவர்தனவால் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
பிரதேச செயலகங்களுக்கு பதிலாக உப செயலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உடனடியாக புதிய பிரதேச செயலகங்களை அமைக்குமாறு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மகஜரொன்றும் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.