இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ” நாட்டு மக்கள் தற்போது சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவருகின்றனர். இதற்கு கொரோனா காரணம் அல்ல. ஏனெனில் எமது நாட்டில் மட்டும் கொரோனா பரவவில்லை. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. ஊழல் ஆட்சி மற்றும் முறையற்ற முகாமைத்துவம் காரணமாகவே எமது நாடு முன்னேறாமல் உள்ளது.
குறிப்பாக சேதனை பசளையை நோக்கி நகரும் முடிவு ஓரிரவில் எடுக்கப்பட்டதாகும். இவ்வாறான முடிவுகள் நீண்டகாலத்தை அடிப்படையாகக்கொண்டு முறையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடந்தது? உலக சந்தையில் உர விலை குறைந்திருந்த சமயம், உர இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது. தற்போது விலை அதிகரித்துள்ளது. இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்பனிகள் இலாபம் அடைந்துள்ளன.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எமது தோட்ட மக்கள் தொழிலுக்குச்சென்றனர். பொருளாதாரத்துக்கு பங்களிப்புச்செய்தனர். ஆனால் பட்ஜட்டிலோ, ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலோ எமது மக்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. மானிய நிலையில் கோதுமை மாவ வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது அதுவும் இல்லை.
இந்த அரசு தொடரும்வரை துன்பமும் தொடரும். இன்று ஈபிஎவ், ஈடிஎவ்பில் கை வைத்துள்ளனர். எனவே, மக்கள் இந்த அரசை விரட்டியடிக்க தயாராக வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடிவு பிறக்கும்.” என்றார்.